கொள்ளிடம் ஆற்றின் மூலம் 45,000 கனஅடி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதாக நாகை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 45,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஓடுகிறது. அதேநேரத்தில், கடைமடை மாவட்டமான நாகையில், ஏராளமான கிளை ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன.
தூர்வாரப்படாத நிலையில் குப்பை நிறைந்து காட்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கொள்ளிடம் அணைக்கரைக்கு கீழே, தடுப்பணை ஏதும் இல்லாத காரணத்தினால், நீரானது கடலில் சென்று கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கிளை ஆறுகளை தூய்மைப்படுத்தி, கடலில் கலக்கும் கொள்ளிடம் உபரி நீரை அதில் திறந்துவிட வேண்டுமென அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

