50,000 ரூபாய்க்கு அரசு மருத்துவமனை துப்புரவுப் பெண்ணிடம் விற்ற தாய்

சேலம் அரசு மருத்துவமனையில் நான்காவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால், அதனை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாயிடமும் குழந்தையை வாங்கிய மருத்துவமனை பெண் துப்புரவு தொழிலாளியிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த ராணிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் நான்காவதாக சேலம் அரசு மருத்துவமனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனால் ராணியை அவரது கணவர் கைவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆதரவற்று வறுமையில் நின்ற ராணியை அனுகிய மருத்துவமனையின் துப்புரவு ஒப்பந்த தொழிலாளி ஜெயா, குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

அதன்படி மேச்சேரியில் வைத்து குழந்தையும் கைமாறியுள்ளது. சில நாட்களில் குழந்தையின் பிரிவுத் துயர் தாளாமல் மனம் மாறிய ராணி புதன் கிழமையன்று ஜெயாவை அணுகி, குழந்தையை கொடுத்துவிடுங்கள் பணத்தைத் தந்துவிடுகிறேன் எனக் கேட்டுள்ளார். இதற்கு மறுத்துவிட்ட ஜெயாவுக்கும் ராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இடைத்தரகராக செயல்பட்ட துப்புரவு தொழிலாளி ஜெயாவிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்றது யார் என்பது குறித்தும் இதுபோன்று வேறு குழந்தைகளை ஜெயா விற்றுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *