பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.2, ரூ.5, ரூ.18க்கு காசோலை – விவசாயிகள் கடும் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையாக 2 ரூபாய், 5 ரூபாய், 18 ரூபாய் என மிகவும் குறைந்த தொகைக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மக்காச்சோளம், சோளம், பருத்தி, மொச்சை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. வறட்சியால் 2016-17 ம் ஆண்டுகளில் பயிர்கள் கருகின. இப்பயிர்களுக்கு காப்பீட்டு ப்ரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.115 வரை விவசாயிகள் செலுத்தி இருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஒட்டன்சத்திரம் தாலுகாவுக்கு உட்பட்ட பொருளூர், சத்திரப்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக 2 ரூபாய், 5 ரூபாய், 8 ரூபாய், 10 ரூபாய், 18 ரூபாய் என போடுவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் காசோலைகள் வழங்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பயிர்களுக்கு காப்பீட்டு ப்ரீமியமாக 600 ரூபாய் முதல் 800 வரை விவசாயிகள் பிரீமியமாக செலுத்திய நிலையில், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து விவசாயம் செய்துள்ளனர். தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால், செலவழித்த பணத்தில் பாதியாவது இழப்பீடாகக் கிடைக்கும் என்று நம்பிக்கையில் விவசாயிகள் இருந்த நிலையில், வங்கிக்குச் செல்ல பேருந்து கட்டணத்திற்குக் கூட இழப்பீடு கிடைக்காததால் வேதனையில் உள்ளனர்.

குறைந்த தொகைக்கு காசோலை வழங்கியது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும் என்றும், தங்களுக்கு இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *