குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்ட தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தற்போது குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்க பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவில் அமைய இருக்கும் முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் இது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பல்கலைக்கழகம் ரயில்வே துறையில் இந்தியாவை முன்னேற்றுவதற்கும், மேலும் பணியாளர்களை இதில் சேர்க்கவும் வகை செய்யும் என்று தெரிவித்தார். மேலும், அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும், 4,000-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவர் என்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் 17 ஆயிரம் கோடி ரூபாயில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என்றும், 25,000 ரயில் நிலையங்களில் எக்ஸ்கலேட்டர் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
இதனிடையே இந்தியாவில் விமான நிலைய ஒழுங்குமுறை ஆணையத்தின் வசம் தற்போது 124 விமான நிலையங்கள் உள்ள நிலையில் அதன் எண்ணிக்கையை 5 மடங்காக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் பயன்பாட்டில் இல்லாத 56 விமான நிலையங்கள் மற்றும் 31 ஹெலிபேடுகள் உதான் திட்டம் மூலம் இணைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

