கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நந்தனார் கல்வி நிறுவனங்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார். பின்னர் இவ்விழாவில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி டெல்டா மாவட்டங்களில் இன்று நடைபெறும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கவிஞர் வைரமுத்துவின் பேச்சை வன்முறை தூண்டும் விதமாக மதவாத சக்திகள் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

