டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 25வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் 29 கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முற்றிலும் விலக்களிக்கவும், 20 லிட்டர் தண்ணீர் கேன் உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான வரியை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்களில், டிக்கெட் கட்டண வரி, 28 சதவிதத்தில் இருந்து 18 சதவிதமாக குறைக்கப்பட்டு உள்ளது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி விவசாயத் தேவைக்கான சில பொருட்களுக்கான வரியும் குறைக்கப்பட்டிருப்பதாக கூறினார். பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து வேறுபட்ட கருத்துகள் இருப்பதாக கூறிய ஜெட்லி, ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். ஜிஎஸ்டி வரிக்கணக்கை தாக்கல் செய்யும் முறையை எளிமைப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், படிவம் 3B மூலமாக கணக்கு தாக்கல் செய்யும் முறை நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி வரி குறைப்பு வரும் 25-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் 60 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்ட்டதாக தெரிவித்தார். ரியல் எஸ்டேட்டை அலுமினியப் பொருட்களுக்கான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பதுடன், விவசாயப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

