டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநருக்கு மனு அளித்ததன் மூலம் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டதாக அர்த்தம் என அரசு கொறடா தரப்பில் கூறப்பட்டது. கட்சிக்குள் பேசி தீர்ப்பதை விடுத்து ஆளுநரிடம் மனு அளித்தது முறையல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியாது என முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகுதிநீக்கம் தொடர்பான புகாரை சபாநாயகர் நிராகரிக்கலாமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் மனு அளித்திருந்தால் மனுவை சபாநாயகர் நிராகரிக்கலாம் என்று கூறினார். இதனையடுத்து வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் தரப்பு வாதங்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
2018-01-10

