ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று போக்குவரத்து ஊழியர்கள் அமைதியான முறையில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக சுமார் 40 தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 6 மணி நேரமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஊதிய பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், 2.57 காரணி ஊதிய உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கேட்டதாகவும், அரசு நிதித்துறையிடம் அனுமதி பெற்று 2.44 காரணி ஊதிய உயர்வு தர ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஊதிய ஒப்பந்தத்தை 32 தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், 10 தொழிற்சங்கங்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். மக்களுக்கும் அரசுக்கும் சிரமம் ஏற்படுத்தாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அமைதியான முறையில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் பேருந்துகள் அண்ணா தொழிற்சங்கத்தினர் மூலம் இயக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

