முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை விமர்சித்த ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அ.தி.மு.கவில் இருந்து டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஆடிட்டர் குருமூர்த்தி இதுநாள் வரை தலைவர்கள் பாதங்கள் பணிந்து அவர்களுக்காக லஞ்சத்தை வசூலித்து கொடுத்து மட்டுமே வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் தற்போது தான் தலைவர்கள் போல் செயல்படத் துவங்கியுள்ளதாக கூறியிருந்தார். அத்துடன், ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த அவர், ஆறுமாதங்களுக்கு பிறகே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குருமூர்த்தி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள் என்று சாடினார். தடித்த, மோசமான வார்த்தைகளை குருமூர்த்தி திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ட்விட்டரில் மீண்டும் பதிவிட்டுள்ள குருமூர்த்தி, தாம் கூறிய சொல்லுக்கு அவர்கள் மனதில் வேறு அர்த்தம் தோன்றினால் தாம் பொறுப்பல்ல என பதிலளித்துள்ளார். தாம் கூறியதில் எந்த தவறோ கண்ணிய குறைவோ கிடையாது என்றும் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

