ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு தற்போது அங்கு தீவிரமான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பறக்கும் படையை சேர்ந்த சிறப்பு அதிகாரிகளும், தமிழக போலீசும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து இரண்டு கம்பெனி துணை ராணுவப்படையினர் நேற்று ஆர்.கே நகர் வந்தடைந்தனர். இன்னும் சில நாட்களில் 10 சிறப்பு கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே நகர் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஆர்.கே நகரில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் இன்று மாலை தண்டையார்பேட்டையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது . இக்கூட்டத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.
2017-12-11

