கோவையில் ஆளுநர் ஆய்வு கூட்டம் நடத்தியதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
கோவையில் அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆலோசனைக் கூட்டம் சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளது. அதில், அரசின் நலத்திட்டப்பணிகள் குறித்த முதல் கட்ட தகவல் அறியவே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், ஆளுநரின் முயற்சியை தமிழக அமைச்சர்கள் உள்பட தமிழ்நாட்டின் ஒரு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் அதை ஏற்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் சூழலைப் பயன்படுத்தி மத்திய அரசின் உத்தரவின் பேரில் செயல்படுவதாக வந்த சில விமர்சனங்கள் துரதிர்ஷ்டவசமானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற சந்திப்பு மூலம் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு சிறந்த புரிதல் கிடைத்ததாகவும், இதுபோன்ற கூட்டங்களின் மூலம் மக்களின் அடிமட்டப் பிரச்னைகளை அறிந்துகொண்டு மத்திய அரசிடம் இருந்து நலத்திட்டங்களுக்கு அதிக நிதி பெற்றுத் தர உதவும் எனவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆளுநரின் ஆய்வுப் பணிகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

