சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டுள்ளதாக கூறினார். இதன் காரணமாக, அடுத்து வரும் 2 நாட்களில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால், நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

