மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவர்களுக்கு ஏற்றார்போல் மாற்றி எழுதிவிடுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக உள்ளதால், மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த பண்ணியான் பகுதியில் நடந்த மோதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கணக்கு குறைத்து காட்டப்பட்டு உள்ளது என்றும் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் முழுமையாக கைது செய்யப்படவில்லை என்றும் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி அரசின் நவம்பர் 8-ம் தேதி கருப்பு பண ஒழிப்பை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசிய பொருளாதார பேரிடர் நாளாக நாடு முழுவதும் கடைபிடிப்பதோடு, அன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், இந்து தீவிரவாதம் என்ற சொல்லுக்கு கமல்ஹாசனை விமர்சிக்க வேண்டியதில்லை என்றும் இதுகுறித்து வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, மதுரையில் தலித் விடுதலை முன்னணி 2-வது அகில இந்திய மாநாடு தொடங்கியுள்ளது. பரிபா பகுஜன் மகாசங்க கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு, 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டை துவக்கிவைத்தனர்.
மாநாட்டில் பேசிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், ஜனநாயக ஒற்றுமை இல்லாத காரணத்தினால் இந்து துவசக்தியை அழிப்பதில் தோல்வி அடைந்துள்ளதாகவும், மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவர்களுக்கு ஏற்றார்போல் மாற்றி எழுதிவிடுவார்கள் என்று குற்றம்சாட்டினார்.

