டெங்குவை கட்டுப்படுத்த ஆலோசனை தராமல் மு.க.ஸ்டாலின் கேலி செய்து வருகிறார் ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு….

டெங்குவை கட்டுப்படுத்த ஆலோசனை தராமல் மு.க.ஸ்டாலின் கேலி செய்து வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிறைவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைத்த அவர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், யாருடைய ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறிய அவர், டெங்குவை கட்டுப்படுத்த ஆலோசனை கூறாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேலி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக மக்களிடம் இருந்து தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றார். எந்த நோக்கத்திற்காக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உழைத்தார்களோ அதேவழியில் பயணிப்போம் என்று அவர் உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *