6வது நாளாக இன்றும் தொடர்கிறது போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்; போக்குவரத்துத் ஊழியர்கள் இன்று குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அறிவிப்பு…

தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகம், ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு இதற்கு முன்பு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று கூறிய அவர், இன்று போக்குவரத்துத் ஊழியர்கள் குடும்பத்துடன் போக்குவரத்து கோட்ட அலுவலகங்கள் முன் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை கைவிட்டு போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினத்திற்குள் பணிக்கு திரும்பும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *