18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக உறுப்பினர்கள் மீதான உரிமைக்குழு நோட்டீசுக்கு எதிராக மனு உட்பட 7 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில், இரண்டாவது நாளாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். அப்போது, முதலமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் உள்கட்சி ஜனநாயகம் மீறப்பட்டதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், எந்தக் கட்சிக்கும் மாறி வாக்களிக்காத 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு முரணானது எனவும் அபிஷேக் சிங்வி வாதிட்டார். மேலும், எந்தக் கட்சிக்கும் மாறி வாக்களிக்காத நிலையில் கட்சித் தாவல் எனக் குற்றம்சாட்டியது தவறானது எனவும் அவர் எடுத்துரைத்தார். இந்த வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

