தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், 2 நாள்கள் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கோரிய வழக்கில், மூவர் குழுவின் தலைவர் தருண் அகர்வாலாக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சாதக பாதகங்களை ஆய்வு செய்யும் தருண் அகர்வாலா தலைமையிலான குழு, பொதுமக்கள் கருத்து கேட்க செப்டம்பர் 23-ஆம் தேதி 2 மணி நேரம் மட்டும் மனுக்களை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. முறையாக விளம்பரம் செய்யாததால், இந்தக் கூட்டம் குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்றும், பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களையும் மூவர் குழு நேரடியாக பார்வையிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் பகுதி மக்கள் பங்கேற்கும் வகையில், 2 நாள்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த ஆணையிட வேண்டுமென மனுவில் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தருண் அகர்வாலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

