ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் பட்டேல் விலக உள்ளதாக தகவல்

அண்மையில், நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளிலும் சுயேச்சைத் தன்மையிலும் அரசுகள் தலையிடக் கூடாது என கூறினார். மேலும், ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டை மதிக்காத அரசுகள், அதனால் ஏற்படும் பின்விளைவுகளால் வருந்த நேரிடும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வங்கிகள் வரம்பில்லாமல் கடன் கொடுக்க அனுமதித்தது யார் என்று கேள்வி எழுப்பினார்.  வாரா கடன்களை தடுக்க ரிசர்வ் வங்கி தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், ரிசர்வ் வங்கியின் இலகுவான கடன் கொள்கைகளே, நாட்டில் உள்ள வங்கிகள் இன்று சந்திக்கும் பெருந்துயரங்களுக்கு காரணம் என்றும் விமர்சித்தார்.

இதனால், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவது குறித்து உர்ஜித் பட்டேல் சிந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள், சுயேச்சைத் தன்மைகளை ஏற்றுக் கொள்வதாகவும், அரசு அதை மதிப்பதாகவும் கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், மக்களின் தேவை மற்றும் பொருளாதார வளர்ச்சியையே கருத்தில் கொண்டு இயங்க வேண்டும் என்பதையும் நிதியமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய அரசும், ரிசர்வ வங்கியும் பரஸ்பரம் பல்வேறு விவகாரங்களை அடிக்கடி ஆலோசித்து முடிவு எடுத்து வரும் நிலையில், மத்திய அரசு ஒருபோதும் பொதுவெளியில் விவகாரங்களை விவாதித்ததில்லை என நிதியமைச்சகம் விளக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *