ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர், அல்வார் நாடாளுமன்ற தொகுதி மற்றும் மண்டல்கர் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் நாடாளுமன்ற தொகுதிகள், மண்டல்கர் சட்டமன்ற தொகுதி, மேற்கு வங்காளத்தில் உள்ள உலுபெரியா, நவுபாரா சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 29-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அஜ்மீர் மற்றும் அல்வார் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரகு ஷர்மா மற்றும் கரண் சிங் யாதவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தாகத் 12, 976 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல், மேற்கு வங்காளத்தின் உலுபெரியா தொகுதி, நவுபாரா சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 இடங்களிலும் பா.ஜ.க தோல்வியை சந்தித்துள்ளது.

