அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்துக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனம் ₹284 கோடியை முதல் தவணையாக லஞ்சம் கொடுத்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ₹56 ஆயிரம் கோடியில் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்படி இந்தியாவில் இந்த விமானங்களை தயாரிக்க, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதை மத்திய அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் ராகுல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் ரபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்துக்காக ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்திற்கு டசால்ட் நிறுவனம் ₹284 கோடியை முதல் தவணையாக லஞ்சம் வழங்கியுள்ளது. ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயத்தில் பிரதமர் மோடி இரவில் தூக்கமின்றி தவித்து வருகிறார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்த விரும்பியதால்தான் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.
காங்கிரஸ் பொய் சொல்கிறது ரிலையன்ஸ் நிறுவனம் பதிலடி
காங்கிரஸ் குற்றச்சாட்டு தொடர்பாக ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் `மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் வருவதால், அரசியல் லாபத்துக்காக எங்கள் நிறுவனத்தையும் அதன் தலைவரையும் காங்கிரஸ் வம்புக்கு இழுக்கிறது. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீண்டும் பொய் சொல்வதுடன், உண்மையை திரித்தும் கூறுகிறது. எங்கள் நிறுவனத்தையும், அதன் தலைவரின் பெயரையும் களங்கப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தேவையற்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது’ என்று கூறியுள்ளது.

