ரஃபேல் விவகாரத்தில் டசால்ட் நிறுவனம் முதல் தவணையாக அனில் அம்பானிக்கு 284 கோடி ரூபாய் வழங்கியுள்ளது – ராகுல் காந்தி

ரஃபேல் ஒப்பந்த பேரத்தில், டசால்ட் நிறுவனம் முதல் தவணையாக அனில் அம்பானிக்கு 284 கோடி ரூபாய் கையூட்டு கொடுத்ததாக ராகுல்காந்தி பரபரப்புக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் என்பதே  மோடிக்கும் அனில் அம்பானிக்கும் இடையிலான கூட்டு எனக் குற்றம்சாட்டினார்.  ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திடம் தொழிற்சாலைக்கு தேவையான நிலம் இருந்ததால்தான், ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தராமல், அனில் அம்பானியுடன் ஒப்பந்தம் போட்டதாக, டசால்ட் சிஇஓ கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால், டசால்ட் நிறுவனம் கொடுத்த பணத்தில்தான் அனில் அம்பானி நிலத்தையே வாங்கியுள்ளார் என்பது இப்போது அம்பலமாகியிருப்பதாக ராகுல்காந்தி கூறினார்.

நட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு டசால்ட் 284 கோடி ரூபாயை வழங்கியது ஏன் என்றும், இதுகுறித்து டசால்ட் சிஇஓ பொய் சொல்வது யாரைக் காப்பாற்ற என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அனில் அம்பானிக்காக தனிப்பட்ட முறையில் தலையிட்டு ஒப்பந்தம் பேசியவர் மோடிதான் என்றும், ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறகுதான், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அவர் புகார் கூறினார்.

நட்டத்தில் இயங்கும் நிறுவனத்தில், டசால்ட் 284 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, இதுதான் கையூட்டு எனப்படுகிறது என்றும், டசால்ட் நிறுவனத்தால் அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்ட முதல் தவணை கமிஷன் இது என்றும் குற்றம்சாட்டினார். ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும், சிபிஐ இயக்குநருக்கு இந்த விவரங்கள் தெரியும் என்பதால்தான், அந்தப் பொறுப்பில் இருந்து அவர் அகற்றப்பட்டார் எனவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *