முத்தலாக் முறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் முறை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என கடந்த ஆகஸ்ட் மாதம், 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது. 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் முத்தலாக்கிற்கு எதிராகவும், மற்ற இருவர் ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை என்ற அடிப்படையில் 3 நீதிபதிகளின் கருத்தே தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, முத்தலாக்கிற்கு முடிவு கட்டுவதற்கான சட்டத்தை இயற்றும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது. நாடாளுமன்றத்தின் வரும் குளிர்காலக்கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சட்டத்தை வரையறுப்பதற்கான அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

