மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 458 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்குவதற்காக சுமார் 700 வீரர்கள் களமிறங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின்போது, விளையாட்டில் கலந்துக்கொண்ட காளை ஒன்று வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்ந்தது. அந்த காளை முட்டியதில் சுமார் 25 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவர் குழுவினர் முதல்உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் படுகாயமடைந்திருந்தவர்கள் மதுரை நகரில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரது உயிர் வரும் வழியிலேயே பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் தற்போது, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் கூறுயுள்ளனர்.
2018-01-16

