பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரத்து 983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் 11 ஆயிரத்து 983 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக 29 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை முன்பதிவு நடைபெறும் என்றும் அவர் கூறினார். சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆந்திரா வரை செல்லும் பேருந்துகள் அண்ணா நகரில் இருந்தும், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் வரை செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்தும், திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர் வரை செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானசோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும், மற்ற பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் செல்லும் என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு சென்னைக்கு வர 3 ஆயிரத்து 770 பேருந்துகளும், மற்ற ஊர்களுக்கு செல்ல 10 ஆயிரத்து 437 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

