பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 23ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்; சென்னையில் நடைபெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் வரும் 23ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் மஹல்லா ஜமா அத் கூட்டமைப்பு, வளர்பிறை நற்பணி மன்றம், பம்மல் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், தேசத்தை மதவாதம் என்றும் அபாயம் சூழ்ந்து அச்சுறுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தாய் மதத்திற்கு திரும்புங்கள் என்று கூறுபவர்களின் கருத்தின்படி பார்த்தால், இந்துகள் அனைவரும் பெளத்தத்திற்கு தான் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹஜ் மானியத்தை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மோடி தலைமையிலான அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 23ம் தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *