கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தும் பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தனர். ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் சென்னை வந்த மத்தியக் குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண உதவிகள், மற்றும் புனர்வாழ்வு பணிகளுக்கான தேவை குறித்து மத்திய குழுவினரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து இந்தக் குழுதான் மத்திய அரசுக்கு எடுத்துரைத்து பரிந்துரைக்க வேண்டும் என்பதால் புயலால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகளை மத்திய அரசுக்கு விளக்குமாறு கோரியதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் அதிகபட்ச உதவி அவசியம் என்பதை வலியுறுத்தி, அது தொடர்பாக உரிய பரிந்துரைகளை அளிக்கக் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

