டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினரை கலந்தாலோசித்து, புயல் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் அரசின் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிருப்தி நிலவுவதாகக் குறிப்பிட்டார். எனவே, அங்குள்ள பொதுநல சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி, பணிகளை விரைவுபடுத்துமாறு முதலமைச்சரை அவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசிடம் நிவாரண நிதியை கேட்டதோடு நின்றுவிடாமல் அதைப் பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். புயல் பாதித்த மாவட்டங்களில் திமுக சார்பில் நிவாரணப் பணிகள் தொடரும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

