மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கான, தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரையிலான லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்காலத்தில், கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், பீகார் மாநில முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். இதையடுத்து, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகளுக்கான தீர்ப்பு விவரம் கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட இருந்தது. இதனிடையே சமீபத்தில் மரணம் அடைந்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு இரங்கல் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தண்டனை விவரம் கடந்த 4ம் வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி தண்டனை விவரம் நேற்று அறிவிக்கபடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தண்டனை அறிவிப்பை இன்றைய நாளுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஷிவ்பால் சிங் அறிவித்தார்.

