ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான குழுவினரும், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட இந்தியக் குழுவினரும் டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இரு நாடுகளிடையே பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, ரயில்வே, அணு ஆற்றல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடைபெற்றது. அப்போது ரஷ்யாவிடம் இருந்து சுமார் நாற்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எஸ் 400 டிரையம்ப் வகையைச் சேர்ந்த 5 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான உடன்படிக்கை கையொப்பமாகியது.
எஸ் 400வகை ஏவுகணை நடமாடும் ஊர்தியில் இருந்து புறப்பட்டு வானில் பறக்கும் விமானத்தையோ, ஏவுகணைகளையோ தாக்கி அழிக்கும் திறன்பெற்றது. இதன் மூலம் போர்க்காலங்களில் நாட்டில் உள்ள முதன்மையான நகரங்களையும் அணுஆயுத அமைப்புகளையும் எதிரிகளின் போர்விமானங்களும் ஏவுகணைகளும் தாக்காமல் காக்க முடியும்.
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கண்காணிப்பு நிலையத்தை அமைக்கவும் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.

