பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டுதோறும் சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கும்போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற இருக்கிறார். அரசின் புதிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த விவரங்கள் ஆளுநர் உரையில் இடம்பெறும். அதன்பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்துவது, கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்குவது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் முதன் முதலாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

