குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 2017-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. மொத்தம் 61 மணி நேரம் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் 78 சதவீதம் ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்றுள்ளன. முத்தலாக் உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 29-ம் தேதி கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். வரும் 29-ம் தேதி காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மைய அரங்கில் இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பிப்ரவரி 1ம் தேதி 2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மொத்தம் 31 அமர்வுகளாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018-01-13

