நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக்குழு ஆலோசனை

நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகளை நேற்று முன்தினம் ஆய்வுசெய்த மத்திய குழுவினர், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நேற்றிரவு நாகை சென்ற டேவிட் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு முன்னதாக, புயல் பாதிப்புகள் குறித்த வீடியோவும் மத்தியக் குழுவினருக்கு போட்டுக்காட்டப்பட்டது.

இன்று காலை மீண்டும் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய மத்தியக் குழுவினர், வேட்டைக்காரன் இருப்பு பகுதிக்கு சென்றனர். புயலால் சேதமடைந்த துணைமின்நிலையத்தை ஆய்வு செய்த அவர்களிடம், மின்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள், அவற்றின் சீரமைப்பு பணி உள்ளிட்டவற்றை புகைப்படங்களுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி எடுத்துரைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் குடியிருப்புகள், விளைநிலங்கள், தோப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *