தீவிரமடைகிறது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்; போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு..

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பெரும்பாலான அரசு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பணிக்கு திரும்பாத போக்குவரத்து தொழிலாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி முதல் கட்டமாக போக்குவரத்து தொழிலாளர்களில் மிகத் தீவிரமாக போராடி வரும் ஊழியர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. கோவை மண்டல போக்குவரத்து கழகம் மூலம், 11 ஆயிரத்து 819 பேருக்கும் மதுரை மண்டல போக்குவரத்து கழகம் மூலம் 4ஆயிரத்து 500 பேருக்கும் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட அறிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி ஜனவரி 11-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் 6 மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 7வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *