தீபாவளி பண்டிகை நாளன்று, 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக அரசே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.
பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாலும், காற்று மாசு, சுவாசக் கோளாறு ஏற்படுவதாலும், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளி நாளன்று, இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், புத்தாண்டு நாளில் நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும், உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியிருந்தனர். இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் கால அளவை நீட்டிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்க அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை அனுமதிக்க கோரியும் தமிழக அரசு சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தபோது, பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும், பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என கூறியுள்ளது.

