தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் கால அளவை நீட்டிக்கக் கோரியும், ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாலும், காற்று மாசு, சுவாசக் கோளாறு ஏற்படுவதாலும், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு மத்திய அரசும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளி நாளன்று, இரவு 8 மணி முதல் 10 மணி வரையும், புத்தாண்டு நாளில் நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும், உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியிருந்தனர். இந்த நிலையில், பட்டாசு வெடிக்கும் கால அளவை நீட்டிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மாற்றக் கோரியும் தமிழக அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

