திருப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். திருப்பூர் – ஆண்டிபாளையத்திலுள்ள தனலட்சுமி நகரில் பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டினுள் செல்லவும், அங்கிருந்து வெளிவர இயலாத சூழலும் ஏற்பட்டது.
தகவலறிந்து சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார், வெள்ளத்தில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை அழைத்து சென்று, அருகிலுள்ள இடுவம்பாளையம் அரசு பள்ளியில் தங்க வைத்தனர். அவர்களுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே சுரங்கப்பாதையில் மழைவெள்ளம் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

