புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி வரும் அருண், தபால் துறை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த அருண், இந்திய தபால் துறையில் சென்னை தெற்கு பிரிவில் பணியாற்றி வந்தார். அத்துடன், இந்திய தபால்துறை கபடி அணிக்காவும் விளையாடி வந்தார். மேலும், புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணிக்காக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக களம் கண்டுள்ளார்.
இதற்கான பயிற்சி மற்றும் போட்டிக்காக தொடர்ந்து விடுப்பு எடுத்து வந்துள்ளார். ஆனால், மத்திய சிவில் பணிகள் விதிமுறை ஐந்து, அதன் உட்பிரிவு ஒன்றின் படி, தற்காலிக ஊழியர் தொடர்ந்து விடுமுறை எடுக்க முடியாது. இது மீறப்பட்டதால், தபால் துறை பணியில் இருந்து அருண் நீக்கப்படுவதாக அறிவித்து, சென்னை தெற்கு பிரிவு மூத்த கண்காணிப்பாளர் ரங்கநாதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், இந்த நோட்டீஸ் பெறப்பட்டதும் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, விளையாட்டு ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அருணுக்கு தபால் துறையில் மீண்டும் பணி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



