அம்மாப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 39 கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
எண்ணெய் கிணறு அமைக்கும் முடிவை கண்டித்தும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் அம்மாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே 39 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் திரண்டு வருகின்றனர். பறை இசைத்து தங்கள் கோரிக்கைகளை முழங்கியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைவரும் ஒன்று திரண்ட பின்னர் மருவத்தூரில் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாகச் சென்று முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக 15 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை ஏற்பட்டால் அதைக் கண்காணிப்பதற்காக மொபைல் கேமரா வேனும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

