டிடிவி தினகரனை அனைவராலும் கவனிக்கப்படும் நபராக உயர்த்தியது பாஜகவின் தவறான அரசியல் நிலைப்பாடுகள் தான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில், கீழ்வெண்மணியில் நடைபெற்ற சாதிய படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு கீழ்வெண்மணி சாதீய படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், டிடிவி தினகரனை அனைவராலும் கவனிக்கப்படும் நபராக உயர்த்தியது பாஜகவின் தவறான அரசியல் நிலைப்பாடுகள் தான் என்று தெரிவித்தார். மேலும் சசிகலா தரப்பினர் இல்லாத அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவால் திமுகவின் வலிமை குறைந்து விடாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தார்மீக ரீதியாக வெற்றி பெற்றிருப்பது திமுக கூட்டணி தான் என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கூறினார்.

