ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் இந்திய ராணுவப் பொறியாளர் உள்பட சிலர், காரில் குப்வாராவில் இருந்து கர்ணா நோக்கி சென்று கொண்டிருந்தனர். டங்தர் பகுதியில் சத்னா டாப் என்ற இடத்தில் கார் சென்ற போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அனைவரும் பனிச்சரிவுக்குள் புதைந்து உயிருக்குப் போராடினர். தகவலறிந்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மலையில் சிக்குவோரை மீட்குப் படையினரும் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பனிச்சரிவில் சிக்கியோரில் 5 பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 6 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

