சென்னை மாநகராட்சியில் தற்போதைய கனமழை மற்றும் பருவமழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கனமழை மற்றும் பருவமழையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன இயந்திரங்களைக் கொண்டு, நீர்நிலைகளில் உள்ள வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகளை தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்ற 458 மோட்டார் பம்புகளும், 130 ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இன்று முதல் அவர்கள் ஆய்வு மற்றும் நிவாரணப் பணிகளை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

