சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விடாமல் பெய்து வரும் கனமழை; குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு

சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழைக்கு 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் பகல் முழுவதும் வானம் வெறிச்சோடியிருந்த நிலையில் மாலை 6 மணி முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையின் மையப்பகுதி மட்டுமின்றி புறநகர் பகுதியிலும் இதே நிலை நீடிக்கிறது. மழையின் காரணமாக, சாலைகளில் மீண்டும் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. கனமழை காரணமாக மெரீனாவில் ஒரு முதியவரும், கீழ்ப்பாக்கத்தில் ஒரு முதியவரும், எண்ணூரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மூதாட்டியும் உயிரிழந்தனர். தியாகராயநகரில் இடி விழுந்த அதிர்ச்சியில் டீக்கடை ஊழியர் ஒருவரும், திரிசூலத்தில் குளத்தில் மூழ்கி ஒருவரும், நங்கநல்லூரில் மின்சாரம் தாக்கியதில் கட்டட வேலைபார்த்து வந்த சிறுவன் ஒருவனும் பலியாகினர். பேசின்பிரிட்ஜ் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து கமலேஷ் என்ற நபர் உயிரிழந்தார். பெரியமேட்டில் முகேஷ் என்ற இளைஞர் சாலையில் இறந்து கிடந்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் கனமழை காரணமாக 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழை காரணமாக, சென்னையின் புரசைவாக்கம், எழும்பூர், கோட்டூர்புரம், ஓட்டேரி, கோவிலம்பாக்கம், முடிச்சூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில், அதிகளவில் மழைநீர் தேங்கியதால் பாதிப்பும் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *