சென்னைக் கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன.
காணும் பொங்கலையொட்டிச் சென்னை மெரினாக் கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் எலியட் கடற்கரையில் ஏராளமானோர் பொழுது போக்குக்காக வருவது வழக்கம். இதைமுன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்புக்காகக் கடற்கரை முழுவதும் பொதுமக்கள் கடல்நீரில் இறங்காத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. போர் நினைவுச்சின்னம் முதல் எலியட் கடற்கரை வரையுள்ள பகுதிகளில் மூவாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் தவிர இணை ஆணையர்கள் 3பேர், துணை ஆணையர்கள் 13பேர், உதவி ஆணையர்கள் 45பேர், காவல் ஆய்வாளர்கள் 130பேர், உதவி ஆய்வாளர்கள் 400பேரும் என ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடலோரக் காவல்படையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள் நூறுபேர் கடலோரத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்காகக் மணலில் செல்லும் 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கடற்கரை நெடுகிலும் 15இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, காந்தி சிலை ஆகிய பகுதிகளில் தற்காலிகமாகக் காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறிக் கடலுக்குள் யாரும் இறங்கிச் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பதற்காக நீச்சல் பயிற்சி பெற்ற மீனவர்கள் 400பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

