சர்க்கார் படத்திற்கு தடை கோரிய வழக்கில் தற்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
படத்தின் கதை – திரைக்கதை தன்னுடையது என கே.வி.ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் இரு கதையும் ஒன்று தான் என அதன் தலைவர் கே.பாக்யராஜ் உறுதி செய்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மாற்றங்களுடன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை எடுத்துள்ளதாகவும், படத்தின் கதையில் தன் பெயரையும் இணைப்பதோடு, ரூ 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரப்பட்டிருந்தது. விசாரணையின் போது தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 30-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனவும் கோரப்பட்டது. இதையடுத்து செவ்வாயன்று விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

