சபரிமலை ஐயப்பன் கோவிலில் திங்கட்கிழமை நடைதிறப்பு, நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு முதல் 144 தடையுத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைக்காக வரும் திங்கட்கிழமை நடைதிறக்கப்பட உள்ள நிலையில், சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு முதுல் 144 தடையுத்தரவு அமலுக்கு வருகிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்களும், இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் ஐயப்பன் கோயில் நடை 6 நாள்கள் திறந்திருந்தபோது, போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர்.

எனினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், சித்திரை ஆட்ட விஷேசம் விழாவுக்காக, ஐயப்பன் கோயில் நடை வரும் 5-ஆம் தேதி மாலை திறக்கப்படவுள்ளது. பின்னர், 6-ஆம் தேதி மாலையில் நடை சாத்தப்படும். இதை முன்னிட்டு, சபரிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

சுமார் ஆயிரத்து 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இன்று இரவு முதல், இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலுக்கு வர உள்ளது. சபரிமலையும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பம்பைக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும்.

நிலக்கல்லில் இருந்து நவம்பர் 5-ஆம் தேதி மதியத்துக்கு பின்னர்தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பம்பை மற்றும் சந்நிதானத்துக்கு செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *