சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு : மாறன் சகோதர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் எதிரான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். இவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவருடைய சகோதரர் கலாநிதி மாறன் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு சென்னை பிஎஸ்என்எல்-ன் அதிவேக தொலைபேசியின் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைக்கேடாக வழங்கியதாகவும், இதனால் அரசுக்கு சுமார் ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.  இந்த வழக்கு சென்னை 14ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேருக்கு எதிராக, கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், வேதகிரி கௌதமன், கண்ணன், ரவி உள்ளிட்ட 5 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், வியாழக்கிழமை இறுதி விசாரணைக்கு வந்தது.  மாறன் சகோதரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள், அமீத் தேசாய், நீரஜ் கிஷன் கவுல், வில்சன் உள்ளிட்ட  ஆஜராகி வாதிட்டனர்.

சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இராஜகோபால் ஆரம்பத்திலிருந்து மனுதரார்கள் தெரிவிக்கும் ஒரே வாதம், ஆதாரம் இல்லை என்பது தான் என வாதிட்டார்.. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இவர்களுக்கு எதிராக, மிக தீவிரமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி இருப்பதாகவும், அதனை  ஏற்க மறுப்பது தவறானது என்றும்  வாதிட்டார். ஆதாரங்கள் இல்லை என்றால் அதனை குற்றச்சாட்டு பதிவின்போது மறுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் சந்தித்து அதன் மூலமே குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்க வேண்டுமே தவிர பொத்தாம் பொதுவாக இவர்கள் ஆதாரமில்லை, ஆவணங்கள் இல்லை என்று கூறும் கூற்றை ஏற்றுக் கொள்ள கூடாது என்றும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல், உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *