சென்னையை அடுத்த கொடுங்கையூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த பாவனா, யுவஸ்ரீ ஆகியோர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தனர். கனமழை காராணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் வீட்டில் இருந்த சிறுமிகள் இருவரும் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காத சிறுமிகள் இருவரும் அதனை மிதித்தனர். மின்சாரம் பாய்ந்ததில் சிறுமிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தோர் சிறுமிகளை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்காக, வியாசர்பாடி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளும், மேலும் 5 களப்பணியாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

