குட்கா முறைகேடு வழக்கில் அதிகாரிகள் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகனின் ஜாமின் மனு இன்று நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அப்போது செந்தில் முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆலைக்கு உரிமம் மட்டுமே வழங்கியதாகவும், முறைகேடுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் வாதிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர், 2013 முதல் 2015 ஆண்டுவரை மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாக கூறினார். இதைக் கேட்ட நீதிபதி மாதம் இரண்டரை லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ குற்றச்சாட்டு இருப்பதால் தற்போது ஜாமின் வழங்க முடியாது என உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

