இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பத்து நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு ராம்நாத் கோவிந்த் தேனீர் விருந்து அளித்து கவுரவித்தார்.
இந்தியாவின் 69வது குடியரசு தின விழாவில் ஆசியான் அமைப்பை சேர்ந்த இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய பத்து நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பத்து நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேனீர் விருந்து அளித்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம், மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் தனபால், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் அதிகமாக கொடிநாள் நிதி வசூலித்ததற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருது வழங்கி சிறப்பித்தார்.

