நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கிறது.
குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. குஜராத்தில் ஆட்சியமைக்க 92 இடங்கள் தேவையான நிலையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்தது. அடுத்த சுற்றில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. இரு கட்சிகளும் பெரும்பாலான தொகுதிகளில் மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், அதன் பின்னர் பெரும்பாலான இடங்களில் பாஜகவே முன்னிலையில் இருந்தது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். 99 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் குஜராத்தில் தொடர்ந்து 6வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.
இதேபோல் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்க 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தனிப்பெருப்பான்மையுடன் இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
வெற்றி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள, பிரதமர் மோடி தேர்தல் முடிவுகள் வளர்ச்சிக்கும், நல்ல ஆட்சிக்கும் கிடைத்துள்ள ஆதரவு என்று கூறியுள்ளார். மேலும் குஜராத், இமாச்சல பிரதேச மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தலை வணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தம் மீது அன்பு காட்டிய குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களுக்கு இதயபூர்வமான நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.

